கோலாலம்பூர்:
கூலாயில் உள்ள ஒரு காப்பகத்தைச் சேர்ந்த ஒரு பராமரிப்பாளர் ஒரு சிறுமியை 13 வயதில் இருந்து வல்லுறவு புரிந்து கர்ப்பமாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததில் கூலாய் வட்டாரமே அதிர்ந்து போயிருக்கிறது.
2022 இல் அச்சிறுமிக்கு பிரசவம் ஆகியது. அக்குழந்தையை பேராக்கை சேர்ந்த ஒரு தம்பதியிடம் அந்த 59 வயது பராமரிப்பாளர் பலவந்தமாக விற்றுவிட்டார் என்ற தகவல் போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2020 ஆம் ஆண்டு தனக்கு 13 வயதாக இருக்கும் போது இந்த நரக வேதனை தொடங்கியது என்று இப்போது 17 வயதை எட்டியிருக்கும் அந்த இளம் பெண் போலீஸ் புகாரில் கூறியிருக்கிறார்.
இந்த பாலியல் வல்லுறவு மேலும் குழந்தை பிறந்தது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று பராமரிப்பாளரும் இல்லத்தில் இருந்த பணியாளர்களும் தன்னை மிரட்டியதாக வும் அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஒருவர் அந்த இல்லத்திற்கு வந்த போது அவரிடம் சொல்லப்பட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இப்பெண் 2020 முதல் 2022 வரை பள்ளிச் செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. பாலியல் வல்லுறவு தொடர்ந்திருக்கிறது.
கடந்த நவம்பர் 29 ஆம் தேதி கூலாய் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அன்றைய தினம் தாமான் மாஸில் உள்ள இல்லத்தில் சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜோகூர் மாநில சமூக நல இலாகாவும் களம் இறங்கி போலீஸ் விசாரணைக்கு உதவியாக செயல்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதை கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ உறுதிபடுத்தினார்.

















