கோவிலில் வழிபடும் சரியான முறை

கோவிலில் நாம் கடைபிடிக்கும் தவறான வழிபாட்டு முறைகள் தான் நம்முடைய வேண்டுதல்கள், வழிபாடுகள், பூஜைகள் பலன் அளிக்காமல் போவதற்கு முக்கியமான காரணம் என பலருக்கும் தெரிவது கிடையாது. கோவிலில் எந்த முறையில், எந்த இடத்தில் நின்று வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோவில் வாசல் துவங்கி, மீண்டும் வெளியே வரும் வரை கோவிலில் வழிபடுவதற்கு என்று சில முறைகள் உள்ளது. அதாவது, கோவிலுக்குள் செல்வதற்கு முன் வெளியில் நின்று முதலில் கோபுரத்தை தரிசித்து, வணங்கி, அதற்கு பிறகு தான் உள்ளே செல்ல வேண்டும். கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் பலிபீடத்திற்கு பின் நின்று, அதை தொடாமல் வணங்கி விட்டு, கொடிமரத்தை பார்த்து வணங்கி விட்டு செல்ல வேண்டும். சிவன் கோவிலாக இருந்தால் உள்ளே சென்றதும் முதலில் விநாயகரையும், நந்தியை வணங்கி விட்டு, சிவன் சன்னதிக்கு சென்று வணங்க வேண்டும். பெருமாள் கோவிலாக இருந்தால் முதலில் கருடாழ்வாரை வணங்கிய பிறகு, தாயாரை தரிசித்து விட்டு, பெருமாளை சென்று தரிசிக்க வேண்டும்.

மூலவரிடம் சென்று நம்முடைய குறைகள், கவலைகள், வேண்டுதல்கள் என வரிசையாக சொல்லி புலம்பி, பட்டியல் வாசிக்காமல், கண்களை திறந்து அவருக்கு செய்யப்பட்டிருக்கும் அலங்காரத்தையும், அவரது ரூபத்தையும் கண்ணாற கண்டு தரிசித்து, மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இறைவனின் ஆற்றலை உணர முயற்சித்து, மன அமைதியை பெற வேண்டும். பிறகு கோவிலை வலம் வந்து, கொடிமரத்தின் முன்பு விழுந்து வணங்க வேண்டும். அதற்கு பிறகு அதன் பக்கவாட்டு பகுதி அல்லது அருகில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அமர்ந்து, உள்ளே தரிசித்த இறைவனின் உருவத்தை மனதில் மீண்டும் கொண்டு வந்து அவரிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதுவே கோவிலில் சென்று வழிபடும் சரியான முறை. இப்படி வழிபட்டால் மட்டுமே நம்முடைய வேண்டுதல்கள் இறைவனின் காதில் விழுந்து, அவை நிறைவேற அவரின் அருள் கிடைக்கும்.

கோவிலுக்குள் வழிபடும் முறை என்று இருப்பது போல், எந்த இடத்தில் நின்று இறைவனை வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பதற்கும் ஒரு முறை உள்ளது. பலரும் கோவிலுக்கு சென்று செய்யும் மிகப் பெரிய தவறு, நேராக மூலவருக்கு எதிராக நின்று அவரை வழிபடுவது. அதாவது சாமியை நேருக்கு நேர் நின்று தரிசித்தால் தான் அவரது பார்வை நம்மீது விழும் என்பது பலரும் இருக்கும் நினைப்பு. ஆனால் இறைவனிடம் நாம் முன் வைத்த கோரிக்கை நடக்காமல் போவதற்கும், இறைவனின் அருள் கிடைக்காமல் போவதற்கும் இது தான் மிக முக்கியமான காரணம் என பலருக்கம் தெரியாது.

நேருக்கு நேராக நிற்பவனுக்கு எதிரி என்று பெயர். எதிரி தான் தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க எதிராக நிற்பான். பிரியத்தை காட்டுகிறவர்கள் அருகில் தான் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இறைவனுக்கு நேராக நின்று வணங்கும் போது அவரது கோபமான பார்வை தான் நம் மீது படும். ஆனால் வலது புறமோ அல்லது இடது புறமோ பக்கவாட்டில் நின்று வணங்கினால் அவரது கடைக்கண் பார்வை நம்மீது படும். கடைக்கண் பார்வையில் தான் அன்பும் கருணையும் நிறைந்திருக்கும். அதனால் தான் ஆன்மிக சான்றோர்கள் அனைவரும் இறைவனிடம், கடைக்கண் பார்வையை தந்தருள வேண்டும் என வேண்டி பாடல்கள் இயற்றினார்கள். அபிராமி அந்தாதியில் கூட அன்னையின் கடைக்கண் பார்வை தான் அறிவு, செல்வம், திடமான மனது, ஆரோக்கியம், ஆயுள் என அனைத்தையும் தரும் என அபிராமி பட்டர் பாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here