மலேசியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே அதிக வருமானம் பெறும் நாடாக மாறும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். இன்று (டிசம்பர் 12) ஆம் தேதி வியாழன் மலேசியா அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (Mitec) தேசிய AI அலுவலகத்தை (NAIO) அதிகாரப்பூர்வ தொடக்கி வைத்து, டிஜிட்டல் கட்டமைப்பை நோக்கிய மாற்றம் எதிர்காலத்திற்கான தைரியமான பார்வையை பிரதிபலிக்கிறது என்று அன்வார் கூறினார். டிஜிட்டல் தகவல்தொடர்புக்கான பிரத்யேக அமைச்சகத்தை நிறுவிய உலகின் சில நாடுகளில் நாமும் இருக்கிறோம் என்றார்.
நமது தேசியக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பானது, 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத அல்லது திட்டமிடப்படாத அசாதாரணமான ஒன்றைச் சாதிப்பதை நோக்கமாகக் கொண்டது. அப்போது நான் நிதியமைச்சகத்தை வழி நடத்தி வரும் வேளையில் இது ஒரு தொடக்கமாக இருக்கிறது. ஆனால் இன்று அது ஒரு அத்தியாவசிய நோக்கமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார். டிஜிட்டல் கல்வியறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இது பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானது என விவரித்தார். டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த காலத்தில், கல்வியறிவு அடிப்படைக் கல்வியைப் பற்றியது. ஆனால் இப்போது டிஜிட்டல் கல்வியறிவு தொடக்கப் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அவசியமான ஒன்றாகும். NAIO வின் ஸ்தாபனம், செயற்கை நுண்ணறிவில் (AI) மலேசியாவின் திறன்களை முன்னேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இது அனைத்து நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை வளர்ப்பதில் உறுதியான ஒரு சுதந்திர நாடாக நமது நிலையை பிரதிபலிக்கிறது என்று அன்வார் கூறினார். அன்வார் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அபரிமிதமான திறனையும் எடுத்துக்காட்டி, ஆசியான் கணிசமான அளவில் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் அறிக்கையின் படி, உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரம் 2030 இல் 13 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும். மலேசியாவைப் பொறுத்தவரை, டிஜிட்டல் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23% வரை பங்களிக்க முடியும். எங்களின் தற்போதைய வேகத்துடன், இது ஒரு வருடத்திற்குள் 25.5% ஆக அதிகரிக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
மலேசியாவின் பொருளாதாரப் பரிணாமத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நாம் ரப்பர் மற்றும் பாமாயில் மற்றும் உற்பத்திக்கு மாறி, இப்போது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறியுள்ளோம். கோபிந்த் சிங் டியோ மற்றும் அவரது குழுவினரால் சிறப்பாக வழிநடத்தப்படும் டிஜிட்டல் அமைச்சகத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நாட்டின் டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலின் வெற்றியை உறுதி செய்ய தலைவர்களிடையே ஆர்வமும் பொறுப்புணர்ச்சியும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். எங்கள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மலேசியா மடானி எதைக் குறிக்கிறார் என்பதைப் பற்றிய ஆழமான புரிதலுடன் பணியாற்ற வேண்டும் – அது நிலைத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் சமமான செல்வப் பகிர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தக் கொள்கைகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முடியும் என்று அன்வார் டிஜிட்டல் மாற்றத்தை மலேசியாவின் மடானியுடன் ஒப்பிட்டு பேசினார். மாற்றம் என்பது பொருள் முன்னேற்றம் மட்டும் அல்ல என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் மைக்ரோசாப்ட் ஆதரவுடன் மைடிஜிட்டல் கார்ப்பரேஷன் மற்றும் ISIS மலேசியா ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் AI ஐ நிர்வகிப்பதில் உள்ள தற்போதைய சவால்கள் குறித்து அரசாங்கத் தரப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் சிந்தனையாளர் குழு, சிவில் சமூக அமைப்பு மற்றும் தொழில்துறை தலைவர்கள் என39 பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துகள் சேகரிக்கப்பட்டது.
இந்த டிஜிட்டல் முன்னுதாரண மாற்றம் மலேசிய டிஜிட்டல் பொருளாதார வரைபடத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி நிலைத்தன்மை மற்றும் சமபங்கு போன்ற மதிப்புகளை உட்பொதிப்பது பற்றியது என்று அவர் கூறினார். வலுவான மற்றும் உள்ளடக்கிய டிஜிட்டல் எதிர்காலத்தை வளர்ப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் , முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் ஆகியோரும் உடன் இருந்தனர்.