(பி.ஆர். ராஜன்)
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2024 அக்டோபர் 18ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்த 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன ரீதியில் அல்லாமல் அனைத்து மலேசியர்களுக்கும் பலன்தரும் ஒரு பொதுவான பட்ஜெட்டாக உள்ளது.
இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகளுக்குக் குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்தவர்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதற்குரிய பல்வேறு உதவித் திட்டங்களும் 2025 பட்ஜெட்டில் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம், கல்வி, வாழ்வாதாரம் என்று அனைத்துத் துறைகளிலும் இந்தியர்களின் நலன்கள் முழுமையாகக் காக்கப்பட்டிருக்கிறது.
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கு (மித்ரா) 100 மில்லியன் ரிங்கிட் இந்தியத் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கும் அவர்களின் தொழில்துறைகளை வலுப்படுத்தவும் தெக்குன் வழி ஸ்பூமி கடனுதவித் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரிங்கிட் என மொத்தம் 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தங்காக்கைச் சேர்ந்த ரமேஷ் சேகர் (வயது 43). ஸ்ரீதரன் கந்தசாமி (வயது 41) ஆகியோர் குறிப்பிட்டனர்.
அனைத்து மொழிப் பள்ளிகளில் ஆர்எம்டி எனப்படும் கூடுதல் உணவுத் திட்டத்திற்கு 870 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது வசதியற்ற பிள்ளைகளின்பசியைப் போக்கி அவர்களின் ஆ ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பி40 பிரிவைச் சேர்ந்த ம ாணவர்களுக்கு இத்திட்டம் பலனைக் கொண்டு வரும். பெற்றோரின் நிதிச்சுமையை வெகுவாகக் குறைக்கும் என்று பெரும் மலாக்கா செங்கைச் சேர்ந்த மனே னோகரன் ஜெயராமன் (வயது 40) கூறினார்.
இவை யாவும் இந்திய சமுதாயத்திற்கு ஒட்டுமொத்த பலன்களைத் தருகின்றன. 2025 பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கென்று தனியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்றும் பொதுவாக வே இந்திய சமுதாயம் தேசிய சமூகப் பொருளாதார அந்தஸ்து உயர்விலிருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் வெகு கவனமாகத் திட்டங்களை வகுத்திருக்கிறார் என்றும் மலாக்காமாச்சாப்பைச் சேர்ந்த அன்பழகன் முனுசாமி (வயது 42) தெரிவித்தார். பாயோங் ரஹ்மா எனும் உணவுக்கூடைத் திட்டத்திற்கு கடந்த 2024 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரிங்கிட்டைக் காட்டிலும் 2025 பட்ஜெட்டில் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு மொத்தம் 300 மில்லியன் ரிங்கிட் என உயர்வு கண்டிருக்கிறது.
மூத்த பிரஜைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை 600 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 2024 பட்ஜெட்டைக் காட்டிலும் இது 100 ரிங்கிட்கூடுதலாகும். என்பதை மலாக்கா அலோர்காஜாவைச் சேர்ந்த குமரன் முனுசாமி (வயது 44) சுட்டிக்காட்டினார்.
மேலும் பள்ளிப் பிள்ளைகள் 50 சென் கட்டணத்தில் வேன் வழி பள்ளி சென்று
வருவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. இது ஏழை, பரம ஏழை பிரிவுகளைச் சேர்ந்த பெற்றோருக்கு மிகப்பெரிய ஆறுதலான விஷயம் என்று கோலலங்காட் பண்டார் சௌஜானா புத்ராவைச் சேர்ந்த செல்வம் ரெங்கசாமி (வயது 61) தெரிவித்தார்.
அரசுப் பணியாளர்களின் உயர்கல்விச் செலவுகளில் 50 விழுக்காட்டைஅரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. அரசுத் துறையில் பணிபுரிகின்ற இந்தியர்கள் இந்த வாய்ப்பினை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டு உயர் பதவிகளில் அமர வேண்டும் என்று கிள்ளானைச் சேர்ந்த கலைச்செல்வன் முத்தையா (வயது 61) வலியுறுத்தினார்.
எஸ்டிஆர் ரொக்க உதவித்தொகை 600 ரிங்கிட் என்று 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எஸ்டிஆர். சாரா திட்டங்களின் கீழ் 13 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டங்களின் வழி நாட்டில் மூத்த வயதிலானோர் 60 விழுக்காட்டினர் பயன்பெறுவர்.
இந்தியர்களும் மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்த உதவியைப் பெறுவதற்குத் தகுதி பெற்றிருக்கின்றனர் என்று கோலாலம்பூரைச் சேர்ந்த மோகன் சின்னப்பன் (வயது 61) கூறினார்.கட்டுப்படியாகும் விலையில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பது 2025 பட்ஜெட்டில் முன்னுரிமை பெற்றிருக்கிறது. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இத்திட்டம் மிகப்பெரிய பலனைத் தரும். சொந்த வீடுகளுக்கு உரிமையாளர்களாகும் வாய்ப்புகளை இந்தியர்களும் பெறுகின்றனர்.
எஸ்டிஆர் உதவி பெறுபவர்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்புத் திட்டம் 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறப்பு, விபத்து, தீச்சம்பவம், வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்தக் காப்புறுதிப் பாதுகாப்புத் திட்டத்தின் வழி பயன்பெறுவர். இப்படியாக அனைத்துத் திட்டங்களிலும் இந்தியர்களின் நலன்கள் காக்கப்படுவதை 2025 பட்ஜெட் உறுதி செய்வதாக இருக்கிறது என்று சிப்பாங் சுங்கை பீலேக்கைச் சேர்ந்த நந்தகுமார் நாகரத்தினம் (வயது 57) சுட்டிக்காட்டினார்.