சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் மாணவியின் அடையாளங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) தொடங்கியது.
சம்பவம் தொடர்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடந்த விசாரணையில், இந்த வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் சொந்த ஊா், பெயா் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், கல்விக் கட்டணம், தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பை தொடா்ந்து முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தற்போது 140 காவலாளிகளுடன் கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் பழுதடைந்த சிசிடிவிகளை உடனடியாக சரி செய்யவும் மாணவிகள் பாதுகாப்பிற்காக கூடுதலாக 30 சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழக மாணவிகள், பெண் பேராசிரியர்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கில் மகளிர் ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 30) விசாரணை மேற்கொள்கிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா் குற்றம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவா் என அறிந்தபோதும் முந்தைய வழக்குகளில் அவா் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
அந்த அலட்சியம் குற்றங்களைச் செய்யும் துணிச்சலை அந்த நபருக்கு கொடுத்துள்ளது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து வருவது குறித்த கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று அந்த ஆணையம் குறிப்பிட்டிருந்தது.