வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புகழ்பெற்ற சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆயினும், அம்மிரட்டல் வெறும் புரளிதான் எனத் தெரியவந்ததை அடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நள்ளிரவு 12.15 மணிக்குக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட மர்ம மனிதர், வடபழனி முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

அதனையடுத்து, காவல் துறையினர், மோப்ப நாய் பிரிவினர், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆகியோர் நள்ளிரவில் கோவிலுக்கு விரைந்தனர்.

அந்நேரத்தில் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்ததால் கோவிலின் வெளிப்புறத்தில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டபின் உள்ளேயும் சோதனையிட்டனர்.

சோதனையில் வெடிகுண்டு தொடர்பாக எந்தப் பொருளும் கிடைக்காததால் அது வெறும் புரளி என உறுதிசெய்யப்பட்டது. பின்னர் காலை 6 மணிக்கு வழக்கம்போல கோவில் திறக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரையும் கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here