சென்னை, டிச.
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்டது.
தொடர்ந்து 48 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் நக்கீரன் இதழின் ஆசிரியர் இராஜகோபாலும் கலந்து கொண்டார்.
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோருடன் டாக்டர் விஜிபி சந்தோஷமும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி முகப்பில் திருவள்ளுவர், மகாத்மா காந்தியடிகள், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தச் சிலைகளையும் உதயநிதி திறந்து வைத்தார்.
இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் 900 விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 1 இலட்சம் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12-ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. வார நாட்களில் பிற்பகல் 2.00 தொடங்கி இரவு 9.00 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 11.30 மணி முதல் இரவு 9.00 மணிவரையிலும் புத்தகக் கண்காட்சி திறந்திருக்கும்.
இந்த கண்காட்சியில், மலேசிய முதன்மை நாளிதழான மக்கள் ஓசையின் ஆலோசகர் இரா. முத்தரசன் எழுதிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹீம் ‘சிறை முதல் பிரதமர் வரை’ நூல் வெளியீடு காணவிருக்கிறது.