ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரள நர்ஸ்; உதவ முன்வரும் ஈரான்!

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை காப்பாற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம் என ஈரான் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியாவின் தாய் மகளை மீட்க போராடி வருகிறார்.

ஏமன் நாட்டு சட்டப்படி ( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார். அவரை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் உள்ள ஈரான் தூதரக உயர் அதிகாரிகள் கூறியதாக வெளியாகும் தகவலில், ” மனிதாபிமான அடிப்படையில், கேரள நர்ஸ் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். இதில், எங்களால் முடிந்தளவு செய்ய வேண்டியதைச் செய்வோம் எனக்கூறியுள்ளனர்,” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here