திருப்பதி:தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரப் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதியில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு மாணவிகளின் ஆபாச படம் பதிவு செய்ததாக தகவல் வெளியானது.இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் கல்லூரிக்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த 3 மாதங்களில் விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு 300 ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் விடுதி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது.கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது. பிரச்சனை வெளியே போனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகின்றனர்.
ஆபாச படங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அழிக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள், காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.
போலீஸார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக கல்லூரியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.