பொது மன்னிப்பு விவகாரத்தில் இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை நமது அரசியலமைப்பு சட்டத்தின் புனிதத்தன்மையை சரியான நேரத்தில் நினைவூட்டுகிறது.
அரசியலைப்பு சட்டம் பிரிவு 42 (1), (2) இன் கீழ் வழங்கப்பட்ட தனிச்சிறப்பு அதிகாரங்கள் தொடர்பான மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆணையை மஇகா முழுமையாக மதிக்கிறது என்று கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் கூறினார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக பேரணி ஒன்றை புத்ராஜெயாவில் நடத்த அம்னோ,மஇகா உட்பட பல கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால் இப்போது அம்னோ இப்பேரணியை நடத்தவில்லை.
ஆனால் நஜிப்பிற்காக ஒன்றுக் கூடுவதில் எந்த தவறும் இல்லை என தாம் கருதுவதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
இது மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆணையை மீறாத ஓர் ஆதரவு, ஒற்றுமை பேரணியாகும். ஒற்றுமை கூட்டங்கள் ஒரு ஜனநாயக உரிமையாகும்.
அதே நேரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக் காவலில் வைக்க அனுமதித்த 16ஆவது மாமன்னர் வழங்கிய கூடுதல் உத்தரவையும் நாம் மதிக்க வேண்டும்.
அவ்வகையில் வரும் திங்கட்கிழமை நஜிப்பிற்கு நியாயமான, பாரபட்சமற்ற நீதித்துறை மறுஆய்வுக்கான அவரது உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.
நீதி எப்போதும் வெளிப்படையாகவும், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் நஜிப்பிற்கு ஆதரவான ஒற்றுமை கூட்டத்தை மஇகா தொடரும்.
ஆனால் புத்ராஜெயாவில் கூடுவதற்கு பதிலாக நஜிப்பிற்கு ஆதரவாக சிறப்பு பிரார்த்தனையை மஇகா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிறப்பு பிரார்த்தனை வரும் ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பத்துமலை முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூட்டாகப் பிரார்த்தனை செய்வோம்.
இந்த பிரார்த்தனைகளில் தங்களுடன் இணைந்து கொள்ள இந்திய சமூகத்தை மஇகா அன்புடன் வரவேற்கிறது என்று டத்தோஶ்ரீ சரவணன் அழைப்பு விடுத்தார்.