பூஜை அறையில் புனிதத் தன்மை இருந்தால் தான் நாம் செய்யும் பூஜைகளுக்கு பலன் கிடைக்கும். நம்முடைய வீட்டில் நாம் வணங்கும் தெய்வம் வந்து குடியேறும். வீட்டின் அதிகமான நன்மைகள் நடைபெற வேண்டும் என்றால் பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் பொருட்களும் மிக மிக முக்கியமானதாகும்.
ஒரு வீட்டின் பூஜை அறை என்பது இறைசக்தி மற்றும் நேர்மறை ஆற்றல்கள் நிரந்திருக்கும் இடமாகும். பூஜை அறை இறைசக்தியை ஈர்க்கும் கந்த தன்மை பெற்றிருக்கிறதா என்பதை பார்த்து தான் அமைப்பார்கள். அதனால் தான் ஒரு வீடு கட்டும் போதே பூஜை அறை இந்த திசையில் இருக்க வேண்டும், சாமி படங்கள் மற்றும் விளக்கு இந்த திசை நோக்கி இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டுகிறோம். பூஜை அறை மட்டுமின்றி சமையல் அறை, படுக்கை அறை என அனைத்தும் அதற்குரிய இடத்தில் வைத்தால் மட்டுமே அதன் முழுமையான ஆற்றலை நம்மால் பெற முடியும்.
வீட்டின் பூஜை அறை இருக்கும் இடம் மட்டுமின்றி அதில் நாம் பயன்படுத்தும் பொருட்களும் மிக மிக முக்கியமானதாக இருக்கும். காரணம் பூஜைக்கு என்று நாம் பயன்படுத்தும் பொருட்களை மற்ற விஷயங்களுக்காக பயன்படுத்த மாட்டோம். அதோடு அந்த பொருட்கள் என்பவை நிரந்தரமாக பூஜை அறையிலேயே இருப்பதாக இருக்கும். பூஜை அறையில் வைக்கும் சாமி படங்கள், சிலைகள், விளக்கு அனைத்தும் தெய்வீக சக்தியை தனக்குள் ஈர்த்து, அதை எப்போதும் நிலையாக வீடு முழுவதும் பரவி இருக்க செய்வதாக இருக்க வேண்டும். அதனால் தான் பூஜை அறையில் பயன்படுத்தும் பொருட்கள் எதனால் செய்யப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறார்கள்.
தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஐம்பொன் ஆகிய உலோகங்கள் தெய்வீக சக்தியையும், நேர்மறை ஆற்றல்களையும் அதிகம் ஈர்க்கக் கூடியவை. அதே போல் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவது மிக மிக சிறப்பு. இது தெய்வீக தன்மையை அதிகம் ஈர்க்கக் கூடியதாகும். அதனால் தான் கோவில் கோபுரங்களில் இருக்கும் கலசங்கள் கூட இந்த குறிப்பிட்ட உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் எவர்சில்வருக்கு எதையும் ஈர்க்கும் வைக்கும் தன்மையோ, அந்த சக்தியை வெளியிடும் தன்மையோ கிடையாது. அதனால் தான் தெய்வ வழிபாட்டிற்கு எவர்சில்வரை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள்.
* விளக்கு, தெய்வத்திற்கு நைவேத்தியம் படைப்பதற்கு எவர்சில்வரால் ஆன பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
* விளக்கு அல்லது கலசங்கள் அல்லது அன்னபூரணி சிலைகள் வைக்ப்பதற்கு எவர்சில்வர் தட்டுக்களை பயன்படுத்தக் கூடாது.
* திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு அக்ஷதை, திருமாங்கல்யம் போன்றவை வைப்பதற்கு எவர் சில்வர் பயன்படுத்தக் கூடாது.
* ஹோமத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள், பூக்கள் ஆகியவற்றை வைக்க எவர்சில்வர் தட்டு அல்லது கிண்ணங்களை பயன்படுத்தக் கூடாது.
* பூஜை அறையில் தீர்த்தம் அல்லது சாமிக்கு நீர் வைப்பதற்கு எவர்சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.
* திருமணம், வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கு பூ, பழம் போன்ற சீர்வரிசை பொருட்கள் வைப்பதற்கு எவர்சில்வர் பயன்படுத்தலாம்.
* பூஜையின் போது நிறைய பழங்கள் வைப்பதாக இருந்தால் எவர்சில்வரை பயன்படுத்தலாம்.
* பூஜையின் போது பூ, பழம் போன்ற பொருட்களை சிறிது நேரம் மட்டும் வைத்து விட்டு, பிறகு அதை வேறு பாத்திரத்தில் மாற்றி விடுவீர்கள் என்றால் அந்த சமயத்தில் எவர் சில்வரை பயன்படுத்தலாம்.
* சாமிக்கு நைவேத்தியம் படைப்பதற்கு மண்ணால் ஆன பாத்திரங்களை பயன்படுத்துவது மிக மிக விசேஷமானதாகும்.