“மேக்ஸ்வெல்: ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு”

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் தொடரை 3 – 1 எனக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டதால், இலங்கைக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றாலும் அவர்களுக்குப் பிரச்னையில்லை. இருந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியா வெல்வது சுலபமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

அதனால், நாதன் லயனுடன் கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் ஆஸ்திரேலியா களமிறங்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரில், சுழற்பந்து வீசக்கூடிய பேட்டிங் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லுடன் செல்வது ஆஸ்திரேலிய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

“மேக்ஸ்வெல்லால் எப்படி முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இதை நான் அவருக்கு எதிராகக் கூறவில்லை. ஆனால், இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு மேக்ஸ்வெல் திரும்பினால் அது அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். இளம் வீரர்களை அழைப்பது சிறப்பாக இருக்கும். சில கடினமான சுற்றுப்பயணங்களில் ஓர் இளம் வீரரை அழைத்துச் செல்வது, நாம் கற்றுக்கொள்வதற்கு விரைவான வழியாகும்.” என்று கூறினார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கியமான, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர்கள் வசமிருந்த வெற்றி வாய்ப்பைத் தனது இரட்டை சதத்தால் பறித்து, ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியிருந்தார். இன்றும், ஒருநாள், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய இடத்தில இருக்கிறார். ஆனாலும், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், 2017-க்குப் பிறகு அந்த ஃபார்மெட்டில் அவர் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அவர் மொத்தமாகவே, 7 போட்டிகளில் விளையாடி 339 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here