கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் (AI) ஓர் அங்கமாக அதனை மேம்படுத்தும் வகையில் மடானி (MADANI) அரசாங்கமானது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடன் (UAE )ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டம் மூலமாக குற்றச் செயல்களைத் தடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த பங்காளித்துவம் வகைசெய்யும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில், புதிய பங்காளித்துவம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உருமாற்ற ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
“இதற்கான கடப்பாட்டை, மலேசியாவுக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் அழுத்தந்திருத்தமாக எடுத்துக்காட்டியுள்ளது.
இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை மையமாகக் கொண்டு மேலும் பாதுகாப்பான, நிலையான சமூகங்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்,” என்று அன்வார் தெரிவித்தார்.