ரஃபிசி, நிக் நஸ்மி ராஜினாமா செய்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்ந்து செயலில் பங்கேற்பார்கள் : அன்வார்

கோலாலம்பூர்,

பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ராம்லி மற்றும் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் அமைச்சரவைப் பதவிகளை ராஜினாமா செய்தாலும், அவர்கள் டேவான் ராக்யாத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்ந்து செயலில் பங்கேற்பார்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அவர்கள் எடுத்த ராஜினாமா முடிவுகள், தங்களது கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட தனிப்பட்ட தீர்மானங்கள் என பிரதமர் கூறினார்.

“அரசாங்கம் இந்த முடிவுகளை மதிக்கிறது. அதே நேரத்தில், இருவரும் மக்களின் நலனுக்கும், தேச முன்னேற்றத்திற்கும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று அவர் நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

ராஜினாமாக்களின் பின்னர் அரசு ஸ்திரமற்றதாக மாறும் என்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி, பிரதமர் டத்தோ ஸ்ரீ ஷாஹிதன் காசிம் (பி.என்–ஆராவ்) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

தற்போதைய நிர்வாகம், அதனை உருவாக்கும் அனைத்து கூட்டணி கட்சிகளின் உறுதியான ஆதரவுடன் வலுவாக உள்ளது என்றும், “கட்சிகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பும் பரஸ்பர மரியாதையும், நாட்டின் நிர்வாகத் தொடர்ச்சிக்கும் சீர்திருத்த திட்டங்களின் செயல்பாட்டுக்கும் முக்கிய அடித்தளம் ஆகும்” எனவும் அன்வார் தெரிவித்தார்.

சமீபத்திய பி.கே.ஆர். துணைத்தலைவர் போட்டியில் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரஃபிசி கடந்த மே மாதம் தனது பதவியை விட்டு விலகினார். கட்சியின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை அரசாங்கத்தில் செயல்படுத்துவதற்கான முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என அவர் காரணம் தெரிவித்தார்.

அதேபோல், கட்சித் தேர்தலில் துணைத்தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத நிக் நஸ்மியும், இதே போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி தனது ராஜினாமாவை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here