இந்தோனேசியாவில் நிலச்சரிவு; 16 பேர் உயிரிழப்பு- ஐவர் மாயம்

ஜக்கர்த்தா:

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதியில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஐவரைக் காணவில்லை என்று இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தோரில் பத்துப் பேருக்கு மருத்துவமனைகளிலும் அருகிலுள்ள சமூகச் சுதாதார நிலையத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

திங்கட்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் மீட்புப் படையினர் இன்னும் ஐந்து பேரைத் தேடிவருவதாகவும் பெகலோங்கான் நகரக் காவல்துறைத் தலைவர் டோனி பிரகோசோ கூறினார்.

கனமழை பெய்ததில் அந்நகரில் உள்ள மலைப்பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

உயிரிழந்தோர் சடலங்களைத் தற்காலிகத் தூக்குப்படுக்கையில் தொண்டூழியர்கள் சுமந்து செல்வதைக் காட்டும் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயின.

சாலைகளில் சேறும் சகதியும் நிரம்பியிருப்பதாகக் கூறப்பட்டது.

மீட்புப் பணிகளில் உள்ளூர்த் தொண்டூழியர்களும் இணைந்துகொண்டனர்.

புதையுண்டவர்களைத் தேடும் பணியில் மண் தோண்டும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படும் என்று கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here