சாங்கி விமான நிலையக் கடைகளில் திருட்டு; இந்தியப் பெண் கைது

கோலாலம்பூர்:

சாங்கி விமான நிலையத்தில் 1,100 சிங்கப்பூர் டாலருக்கும் அதிக மதிப்புகொண்ட வாசனை திரவியப் போத்தல்களையும் நினைவுப்பொருள்களையும் திருடிய சந்தேகத்தின்பேரில் 62 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு சில்லறை வர்த்தகக் கடைகளில் குறித்த பொருள்கள் காணாமற்போனது தங்களுக்குத் தெரிய வந்ததாகக் காவல்துறை நேற்று (ஜனவரி 22) தெரிவித்தது.

சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் விமானம் மாறும் இடங்களில் ஒன்றில் இருக்கும் அக்கடைகளில் நிகழ்ந்த திருட்டு குறித்து சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

கடை ஒன்றில் வேலை செய்த ஊழியர், மாது ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொண்டதைக் கவனித்தார். அந்த மாது கடைக்கு வந்த பிறகு எதுவும் வாங்காமல் புறப்பட்டதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணை விமான நிலையக் காவல்துறைப் பிரிவினர் கைதுசெய்தனர். அந்தப்பெண் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கைதுசெய்யப்பட்டார்.

அந்த பெண் நான்கு வெவ்வேறு கடைகளுக்குச் சென்று பல்வேறு பொருள்களைத் திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பில் வியாழக்கிழமையன்று (ஜனவரி 23) சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here