வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு வரி விதித்துள்ளார்.
இதில் மெக்சிகோ, கனடா ஆகிய இரு நாடுகளிலிருந்து வரும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியும் சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்கு 10 விழுக்காடு வரியும் விதிக்கப்படுவதாக அவர் சனிக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) அறிவித்தார். இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4ஆம் தேதி) நடப்புக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கனடாவிலிருந்து வரும் எரிசக்திப் பொருள்களுக்கு 10 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார். ஆனால், மெக்சிகோவில் இருந்து வரும் எரிசக்திப் பொருள்களுக்கு முழு அளவில், அதாவது 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும் அவர் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.



















