இணையப் பாதுகாப்பு என்ற வார்த்தை தற்போது அனைத்துலக நாடுகளால் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு வார்த்தை என்றால் அது மிகையாகாது. இணையப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு தொழில் நுட்பக் கல்வி எனப்படும் ஐடி அடிப்படைக் கல்வியாக விளங்குகிறது. அந்த வகையில் மலேசியாவிலும் ஐடி துறைக்கான வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
ஐடி கல்வியை முடித்து வேலை தேடுபவர்களுக்கு மலேசிய இந்திய உருமாற்றத் திட்டமான மித்ரா ஓர் அரிய வாய்ப்பினை வழங்குகிறது. இன்டலைஸ் – இசி கார்மஸ்- மித்ரா ஆகியவற்றின் கூட்டணியில் 200 ஐடி பட்டதாரிகளுக்கு சிறப்புப் பயிற்சியை வழங்கி வேலை வாய்ப்பினையும் பெற்று தரவிருக்கின்றனர் என்று மித்ராவின் தலைவர் ப.பிரபாகரன் தெரிவித்தார். 3 விதமான சான்றிதழ்கள் கொண்ட இந்தப் பயிற்சியை நீங்கள் சொந்தமாக பயில 25,000 ரிங்கிட் வரை செலவாகும். மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அவலன்ஸ் வழங்கப்படும் என்றார் அவர்.
ஐடி துறையில் கல்வியை முடித்து வேலை தேடும் பட்டதாரிகள் மித்ரா வழங்கும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். ஐடி கல்வி என்பது கடலளவு பெரிதாகும். ஆனால் இணைய பாதுகாப்புக் கல்வி அதன் அடிப்படைக் கல்வி என்றும் அவர் விவரித்தார். இப்பயிற்சியில் இணைய தங்கள் பெயர்களை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பதிந்து கொள்ள வேண்டும் என்றும் மேல் விவரங்களை www.intellize.com.my/MITRA/ இணையத்தளத்தில் வலம் வரலாம்.