வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மலேசிய தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி இருக்கிறார்.

மலேசியர்கள் என்ற முறையில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் வாக்களிப்பது அவர்களின் ஜனநாயக உரிமை. அதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் பெல்ஜியம், பிரஸ்செல்ஸில் சுமார் 200 மலேசியர்களை பிரதமர் அன்வார் சந்தித்தார்.

பிரதமருடன் உரையாடி மகிழ்ந்த அவர்கள், அவரின் தலைமைத்துவத்தில் நாட்டில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்களையும் ஏற்றங்களையும் பாராட்டினர்.
அனைத்து இன மக்களையும் பாரபட்ச மின்றி அரவணைக்கும் பிரதமரின் பண்பையும் அவர்கள் பாராட்டியதோடு சாமான்ய மக்களுக்கு மடானி அரசாங்கம் வழங்கி வரும் பல்வேறு நலத்திட்டங்களையும் உதவி திட்டங்களையும் வரவேற்றனர்.
வெளி நாடுகளில் உள்ள மலேசியர்கள் பொதுத் தேர்தல் காலங்களில் நாடு திரும்பி வாக்களிப்பதற்கு சில வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுப்பது பற்றியும் ஆலோசனை வழங்கி இருப்பதாகவும் பிரதமர் அன்வார் கூறினார்.

இதற்காக கூடுதல் பணம் செலவானாலும் பரவாயில்லை. இதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை ஆராயுமாறு தாம் முன்வைத்த இப்பரிந்துரையை பரிசீலிப்பதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.




















