கோலாலம்பூர்,
நெல் கொள்முதல் புதிய உச்சவரம்பு விலையை அரசாங்கம் அடுத்தவாரம் அறிவிக்கும். இதில் விலை அதிகரிப்பு இருந்தாலும் பயனீட்டாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கூடுதல் மானிய உதவித்தொகையை அது கொண்டிருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுக் கூறினார்.
புதிய உச்ச வரம்பு விலை அதிகரிப்புக்கான காரணத்தை விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு அமைச்சரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறார். உச்சவரம்பு விலை அதிகரிப் பானது அரிசி விலை அதிகரிப்பைத் தவிர்க்க முடியாததாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் சுமையைத் தருவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. இதனால் அந்தக் கூடுதல் விலைக்கான மானிய உதவியை அரசாங்கம் உறுதி செய்யும் என்று தெரிவித்த அன்வார், நிதி அமைச்சிடம் இது குறித்து தாம் ஏற்கெனவே பேசிவிட்டதாகச் சொன்னார்.
இந்த முயற்சிக்கு அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசாங்கம் கூடுதலாக 150 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும் என்று நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தின்போது தெரிவித்த நிதி அமைச்சரு மான அவர், இதன் விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
நெல் கொள்முதல் உச்சவரம்பு விலையை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,800 ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டும் என்று நெல் விவசாயிகள் கோரி வருவது தொடர்பில் பெலூரான் பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரொனால்ட் கியாண்டி எழுப்பிய ஒரு துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

2023ஆம் ஆண்டில் அரசாங்கம் நெல் கொள்முதல் உச்ச வரம்பு விலையை ஒரு மெட்ரிக்டன்னுக்கு 1,300 ரிங்கிட்டாக நிர்ணயம் செய்தது. இதற்கு முன்னதாக உச்சவரம்பு விலை மெட்ரிக் டன்னுக்கு 1,200 ரிங்கிட்டாக இருந்தது. 100 ரிங்கிட் அதிகரித்து ஒரு மெட்ரிக்டன்னுக்கு உச்சவரம்பு விலை 1,300 ரிங்கிட்டாக 2014ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. அதுமுதல் இன்றளவும் இந்த உச்சவரம்பு விலை எவ்வித மாற்றமும் இன்றி அமலில் இருக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் இலாகா அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மகஜரை தாம் முழுமையாக ஆய்வு செய்து பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டதாக அன்வார் தெரிவித்தார். கூடுதலாக விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சுடனும் இது குறித்து தாம் பேசி இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
நெல் விவசாயிகளுக்கு இந்த உச்சவரம்பு விலை அதிகரிப்பை அமல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பலவீனப்படுத் துவதற்கு முயற்சி செய்யும் எதிர்க்கட்சியினரை அவர் கடுமையாகச் சாடினார். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் தவறி விட்டனர். இதனை மறுக்காதீர்கள். இதுதான் உண்மை. சத்தம் போட்டீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது நெல் உச்சவரம்பு விலையை உங்களால் அதிகரிக்க முடியவில்லை என்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
இப்போது மடானி அரசாங்கம்தான் நெல் கொள்முதல் உச்ச வரம்பு விலையை அதிகரிக்கவிருக்கிறது. பயனீட்டாளர்கள், நெல் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கம் இம்முயற்சியை எடுத்திருக்கிறது. குறிப்பாக பி40 பிரிவில் உள்ளவர்கள் எதிர்நோக்கும் நிதி சிரமங்களையும் இந்த அரசாங்கம் முழுமையாக உணர்ந்திருக்கிறது. அதன் காரணமாகவே இவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்கு மடானி அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று அவர் கூறினார்.























