கோலாலம்பூர்,
பொதுச்சேவை மனோவியல் சுகாதார டிஜிட்டல் முறையின்கீழ் பரிசோதனை செய்யப்பட்ட மொத்தம் 44,901 அரசாங்க ஊழியர்கள் மனநலப் பாதிப்பு அபாயத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனஉளைச்சல், பதற்றம், தற்கொலை முயற்சி போன்றவை தொடர்பான மனநலப் பாதிப்பில் இவர்கள் உள்ளனர் என்று பிரதமர் இலாகா கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா கூறினார்.
2024 மார்ச் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்தச் பரிசோதனையில் 975,780 அரசாங்க ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்களுள் 4,6 விழுக்காட்டினர் இந்த மனநலப் பாதிப்பு அபாயத்தில் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனை முறையை பொதுச்சேவை இலாகா உருவாக்கியது. மனோவியல் சுகாதார அதிகாரிகள் அதனை மதிப்பீடு செய்வர் என்று அவர் சொன்னார். ஒட்டுமொத்தத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டி இருக்கிறது.
தன்னுடைய அதிகாரிகளுக்கு மத்தியில் மனோவியல், மனநலப் பாதிப்பு அபாயங்களை அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட இத்திட்டம் குறிப்பிடத்தக்க பலனைத் தந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த அறிகுறிகளுக்குத் தடுப்பு நடவடிக்கைகளையும் வியூகங்களையும் மேற்கொள்வதற்கு இப்பரிசோதனை பெரும் பங்காற்றி இருக்கிறது.அரசாங்க ஊழியர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கு இது ஒரு விரிவான திட்டமாகும்.
தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அதற்குரிய சிகிச்சைகளில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பில் இவரின் எழுத்துப்பூர்வமான பதில் நாடாளுமன்ற மக்களவை வலைத்தளத்தில் நேற்றுப் பதிவேற்றம் செய்யப்பட்டது.
40 ஆயிரத்திற்கும் அதிகமான அரசாங்க ஊழியர்கள் மனநலப் பாதிப்பு அபாயத்தை எதிர்நோக்கி இருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க திட்டங்கள் என்ன என்று கோல நெருஸ் பெரிக்காத்தான். நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரசாக் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் எஸ்லிஹா எழுத்துப்பூர்வமான பதிலைத் தந்திருக்கிறார்.
ஒரு விரிவான மேலும் ஆழமான அணுகுமுறை வழி இந்தப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் வியூக நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் அந்தப் பதிலில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.











