கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு

கொல்கத்தா,மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும். டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சியல்டா கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்க மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டார்.

குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக்கூறி இந்த வழக்கை விசாரித்த சிபிஐ மற்றும் மேற்கு வங்காள அரசு சியல்டா கோர்ட்டு உத்தரவை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுக்கள் இன்று கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி தேபாங்சு பசாக் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக சியல்டா கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தபோது மாநில அரசு பங்கேற்கவில்லை. கடந்த மாதம் 18ம் தேதி சஞ்சய் ராயை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்டு, 20ம் தேதி அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. அதன்பின்பு திடீரென குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி மாநில அரசு மனுதாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது. மாநில அரசுக்கு இந்த விவகாரத்தில் எவ்வித அங்கீகாரம் இல்லை என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். மேலும், மேற்கு வங்காள அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here