‘சபாவில் தொலைந்துபோன உலகம்’ என்ற தலைப்பில் கஸகஸ்தானில் உரையாற்றி விருது பெற்றார் மலேசியப் பெண் எலினா

கு. தேவேந்திரன்

கோலாலம்பூர், ஜூலை 26-

திரைக்கடல் ஓடி திரவியம் தேடு எனும் முதுமொழிக்கேற்ப கற்றவர்கள்  எங்கு சென்றாலும் அவர்களுக்கு என்றுமே சிறப்பு உண்டு என்பதற்கேற்ப நம் நாட்டில் மலேசியத் திரெங்கானு பல்கலைக்கழக தமிழ் மாணவி எலினா பன்னீர்செல்வம் கஸகஸ்தான் நாட்டிற்குச் சென்று நாட்டிற்கு நற்பெயரைத் தேடித் தந்துள்ளார்.

நம் நாட்டின் சுற்றுச்சுழல், புராதனச் சின்னம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைக் குறித்து அந்த நாட்டில் அவர் பேசிய பேச்சு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றதோடு அவருக்குச் சிறந்த பேச்சாளர் எனும் விருதையும் பெற்றுத் தந்துள்ளது.

மாலியாவ் பேசின் பாதுகாப்புப் பகுதி சபாவில் தொலைந்துபோன உலகம் குறித்து அவர் அந்த நாட்டில் உரையாற்றினார். நேற்று கஸகஸ்தான் நாட்டில் இருந்து நாடு திரும்பிய அவர், தொலைபேசி வாயிலாக மக்கள் ஓசையிடம் பேசினார்.

அனைத்துலக யுனெஸ்கோ 2ஆம் மாநாடு இம்மாதம் ஜூலை 22, 23ஆம் தேதிகளில் கஸகஸ்தான் எல்மிர்ட்டி எனும் ஊரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் இறுதிப் போட்டியாளராகத் தேர்வு பெற்ற எலினா பன்னீர்செல்வம் தனது விவேகமிக்க பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார்.

நம் நாட்டில் குறிப்பாக சபா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சுழல், அங்குள்ள புராதனச் சின்னங்கள் ஆகியவற்றை தனது நாவன்மையால்  பேசி வருகை தந்தோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

உலக வரலாற்றில் சுற்றுச்சுழல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சபாவில் உள்ள சுற்றுச்சுழல்கள் அங்கு இருக்கின்ற காலச் சுழல் மாற்றம் குறித்து எலினா பேசினார்.

மேலும் அவர் மக்கள் ஓசையிடம் தெரிவித்ததாவது: இந்தப் போட்டிக்கு மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்து நான் கலந்து கொண்டேன். இதன் மூலம் என்னால் முழுமையாக இந்தப் போட்டியில் பங்கேற்று நாட்டிற்கும் நான் கல்வி பயில்கின்ற பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ளேன்.

அது மட்டுமல்லாது பேராக், பிலோமினா தமிழ்ப்பள்ளியில் நான் ஆரம்பக் கல்வி கற்றேன். அந்தப் பள்ளிக்கும் பெருமை தேடித் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று எலினா கூறினார்.

என்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மட்டுமல்லாது பெற்றோர் பன்னீர்செல்வம் – சுமதி தம்பதியர் ஆவர் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here