கோலாலம்பூர்:
நாட்டின் அமைதியை மற்றவர்கள் சீர்குலைத்துவிட மலேசியர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நம்முடைய நாட்டின் அமைதிக்கு மற்றவர்கள் குந்தகம் விளைவிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். தலைநகரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வளாகத்தில் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றினார்.
சாரோங் மியூசிக் ரன் 2025 எனும் இந்த நிகழ்ச்சி சுகாதாரத்தை இலக்காக மட்டும் கொண்டிருக்கவில்லை. . மாறாக இந்த நாட்டில் உள்ள பல இன மக்களிடையே நட்புறவை வலுப்படுத்தும் விதமாகவும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்று அவர் சொன்னார்.
கைலி அணிவது ஒரு கலாச்சாரம். மலாய்ப் பிரதேசத்தில் இந்தக் கலாச்சாரம் பிரபலமான தன்மையைக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். மக்களுக்கும் நாட்டிற்கும் பாதுகாப்பு நிலைத்திருக்க நாம் அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம். அதேசமயம் நாட்டின் பொருளாதாரமும் வருமானமும் தொடர்ந்து உயர்வதற்குத் தொடர்ந்து பிரார்த்திப்போம் என்று அவர் சொன்னார்.
பல்வேறு இனங்களையும் கலாச்சாரத்தையும் சமயத்தையும் கொண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த பிறகு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.
மலேசிய மராத்தோன் அமைப்புடன் இணைந்து மலேசிய சுற்றுலா கலை கலாச்சாரத்துறை அமைச்சு இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதனை முன்னிட்டு 5 கிலோ மீட்டர் ஓட்டப்போட்டியும் 3 கிலோ மீட்டர் நடைபோட்டியும் நடந்தேறியது.
அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங், தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில், கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமட் ஷஃரிப் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டனர்.