புதுடில்லி:
உலக அளவில் 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, திருப்பதியில் பிப்.,17 முதல் 19 வரை மாநாடு நடக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத ஒரு முயற்சியாக, உலக அளவில் உள்ள பிரபலமான 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஆன்மிக சுற்றுலாக்களை முறையாக ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களுக்கான சுற்றுலா சந்தை மதிப்பு ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய். இத்தகைய வருவாய் ஈட்டக்கூடிய ஆன்மிக சுற்றுலாவை ஒரே நெட்வொர்க் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
இது மக்கள் எளிதான முறையில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோவில்களை அணுகுவதை உறுதி செய்யும். இது தொடர்பாக, சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை திருப்பதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஐ.டி.சி.எக்ஸ் 2025 மாநாடு ஹிந்து ,சீக்கிய, பவுத்த மற்றும் ஜெயின் ஆன்மிக நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.




















