(ஆர்.காவியா, ஜெனகன் சிவா)
பெட்டாலிங் ஜெயா
இந்தியர்களுக்கு ஒரு கிளப் ஹவுஸ் அமைக்க வேண்டும் என்பது தான் காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் இலக்கு. இது எந்த சமயத்திலும் சாத்தியமாகலாம் என்று அதன் செயலாளர் சந்திரன் நேற்று தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், சுற்றுச்சூழல் இலாகா ஆகியவற்றுடன் இணைந்து புக்கிட் காசிங்கில் கொத்தோங் ரோயோங் துப்புரவு பணியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 155 பேருக்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு 8 கிலோ மீட்டர் நீளமுள்ள புக்கிட் காசிங் நடைபயண பாதையை (Hiking Trail) சுத்தம் செய்தனர். கிட்டத்தட்ட 450 கிலோ குப்பைகளும் சேகரிக்கப்பட்டன என்று சந்திரன் மேலும் சொன்னார்.
இந்நிகழ்ச்சியில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யாகாரன், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங், பெட்டாலிங் ஜெயா துணை மேயர் அஸ்னான் பின் ஹசான், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் தேரன்ஸ் டான் தெக் செங், சிலாங்கூர் சுற்றுச்சூழல் இலாகா சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அதிகாரி முகமட் ஷக்கிரின் முகமட் ஸாஹார், லேட்டஸ்டாக குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், ரெஸ்டோரெண்ட் இந்தியா கேட் பிரதிநிதி பிரியங்கா சரவணன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர் என்று ஏற்பாட்டுக் குழு துணைத் தலைவர் திருமதி சந்தானா மணியம் தெரிவித்தார்.
காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் வி.எஸ்.வேல் குமார், புக்கிட் காசிங்கில் நடைப் பயணம் மேற்கொள்வதற்கு பொது வசதிகளை தரம் உயர்த்தக் கோரும் ஒரு மகஜரை துணை மேயரிடம் வழங்கினார் என்று இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் கே.ஆத்ம காந்த் குறிப்பிட்டார்.
சக்ரவர்த்தி கோபால், வி.எஸ்.வேல்குமார், ரெங்கசாமி, பாலசுந்தரம், ஹர்பன்ஸ் கவுர், கே.ஆத்ம காந்த், என்.ராமசந்திரன், திருமதி சரோஜா, ராஜரத்னம், ரவி, தேவராஜ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய இந்த கிளப் 2013 இல் விளையாட்டு மன்றத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு பெற்றது என்றும் தற்போது 80க்கும் அதிகமானோர் இதில் உறுப்பியம் பெற்றுள்ளனர் என்றும் சந்திரன் கூறினார்.
இளைஞர்கள், மூத்தப் பிரஜைகள், சீனியர்கள் என அனைத்து வயதினரும் இந்த உறுப்பினர்களில் அடங்குவர். புக்கிட் காசிங், ஸ்ரீ பிந்தாங், No Man’s Land எனப்படும் மவுன்ட் புக்கிட் கியாரா ஆகிய மலைப் பகுதிகளிலும் நடைப் பயணம் போவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தியா, கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் விளையாட்டு மன்றங்களுடன் இணைந்து நடைப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
குப்பைகளை, பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தி புக்கிட் காசிங் பகுதியின் இயற்கை அழகை நிலைநிறுத்துவதோடு பொது மக்களுக்கு சுற்றுச்சூழலை பேணுவதில் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கொத்தோங் ரோயோங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று சந்திரன் தெரிவித்தார்.
பிரமுகர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் காலை பசியாரல் வழங்கிய ரெஸ்டோரண்ட் இந்தியா கேட், மதிய உணவு வழங்கிய லோட்டஸ் குழுமம் ஆகியோருக்கு திருமதி சந்தானா மணியம் நன்றி தெரிவித்தார்.