டொரோன்டோவில் தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த விமானம்; 18 பேர் காயம்

டொரோன்டோ:

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று கனடாவின் டொரோன்டோ நகர விமான நிலையத்தில் தரையிறங்கியபோது தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியபோது வானிலை மோசமாக இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

டொரோன்டோ நகரின் பியர்சன் விமான நிலையத்தில் நேற்று (பிப்ரவரி 17) நிகழ்ந்த இச்சம்பவத்தில் 18 பேர் காயமுற்றனர். அவர்களில் ஒரு குழந்தை உட்பட மூவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் செயின்ட் பால் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து டொரோன்டோ சென்ற அந்த விமானத்தில் 80 பேர் பயணம் செய்தனர். அவர்களில் நால்வர் விமானச் சிப்பந்திகள் என்றும் 76 பேர் பயணிகள் என்றும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.

விபத்தைக் காட்டும் காணொளியில் விமான இறக்கை ஒன்று உடைந்து கிடப்பதைக் காணமுடிந்தது.

அதே விமானத்தில் பயணம் செய்த ஜான் நெல்சன் எனும் பயணி விபத்து குறித்த காணொளியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்வதாகக் கனடிய அதிகாரிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here