பிகேஆரின் கோல சிலாங்கூர் பிரிவின் வருடாந்திர கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் குழப்பம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிடமிருந்து புகார் பெறப்பட்டதாக கோல சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அஸாருதீன் தாஜுடின் தெரிவித்தார்.
அறிக்கையைத் தொடர்ந்து, குற்றவியல் மிரட்டலுக்காக கோல சிலாங்கூர் காவல்துறை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506இன் கீழ் விசாரணையைத் தொடங்கியது என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கூட்டத்தில் ஒரு நபர் தன்னை ஒரு பராங்கைக் கொண்டு மிரட்டியதாக புகார்தாரர் போலீசாரிடம் கூறியதாக அவர் கூறினார். பின்னர் அந்த நபர் அப்பெண்ணிடம் நெருங்கிச் சென்று தொந்தரவு செய்ததாகவும் அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் கோலா சிலாங்கூர் காவல் தலைமையகத்தை 03-32891222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அஸாருதீன் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் தலைவர் உட்பட மூன்று நபர்கள் தலைமையிலான குழுவுடன் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து, கோல சிலாங்கூர் பிகேஆர் செயலாளர் விக்னேஷ்வர் கிருஷ்ண மூர்த்தி பெஸ்தாரி ஜெயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வாக்குவாதத்தின் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர்களிடம் நியாயப்படுத்த முயன்றதாகவும், ஆனால் அந்தக் குழு ஒத்துழைக்கவில்லை என்றும் விக்னேஷ்வர் கூறினார்.
கோலா சிலாங்கூர் பிகேஆர் தலைவர் தீபன் சுப்பிரமணியம், திங்களன்று கோல சிலாங்கூர் காவல் தலைமையகத்தில் இந்த குழப்பம் குறித்தும், சம்பவத்தின் வீடியோவை வெளியிட்ட எடிசி சியாசத்துக்கு எதிராகவும் புகார் அளித்ததாகக் கூறினார். கட்சித் தேர்தல்கள் நெருங்கி வருவதால், கட்சியின் நற்பெயரை சேதப்படுத்தும் நாசவேலை நடவடிக்கைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த விஷயத்தை மேலும் விசாரணைக்காக காவல்துறையிடம் விட்டுவிடுகிறேன். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பது குறித்து முடிவெடுப்பதை கட்சியின் தலைவர்களிடமே விட்டுவிடுகிறேன் என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.










