கோலாலம்பூர்: 30 நாள் விசா இல்லாத நடைமுறை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து நான்கு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளும் மலேசியாவிற்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2023 முதல் கடந்த ஆண்டு டிசம்பர் வரை விசா இல்லாத நடைமுறை செயல்படுத்தப்பட்டதிலிருந்து மொத்தம் 4,145,535 சீன குடிமக்கள் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்திய குடிமக்களைப் பொறுத்தவரை, அதே காலகட்டத்தில் 1,464,499 வருகைகள் இருந்தன. இந்த நடவடிக்கை நாட்டிற்கு வருவாயை ஈட்டித் தந்தது. மேலும் அனைத்துலக அரங்கில் முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற பல துறைகளில் மலேசியா ஒரு முக்கிய பங்களிப்பாளராக இருப்பதை உறுதி செய்தது என்று அமைச்சகம் மார்ச் 5ஆம் தேதியிட்ட நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளது. சாத்தியமுள்ள நாடுகளுக்கான விசா இல்லாத கொள்கை மலேசியாவிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தூண்ட உதவியது என்பதை இது காட்டுகிறது என்று அது மேலும் கூறியது.
சீன மற்றும் இந்திய குடிமக்களுக்கான 30 நாள் விசா இல்லாத நடைமுறையின் நிலை திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து டத்தோ மாஸ் எர்மியதி சம்சுதின் (பிஎன்-மஸ்ஜித் தனா) கேட்ட கேள்விக்கு அமைச்சகம் பதிலளித்தது.








