கோலாலம்பூர்:
கெடா, சிக் பகுதியில் தங்களின் வீட்டிற்கு அருகிலுள்ள மாட்டுத் தொழுவத்தில் பறித்த காட்டுக்காளான்களைச் சமைத்துச் சாப்பிட்ட 28 வயதுடைய முகமட் பாசிர் அபிடுடின் அப்துல் ரசாக் மற்றும் இன்தான் நபிலா மாஸெலாம் ஆகிய இளம் தம்பதியினர் கடுமையான உணவு நச்சுப் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதிய உணவாகக் காளான்களைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்த இவர்களைக் காப்பாற்ற, மலேசிய ஜாரியா அறவாரியத்தின் தன்னார்வப் படைக்கு நேற்று பிற்பகல் 4 மணியளவில் அவசர அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக்குழுவினர், தம்பதியினர் இருவரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் மிக பலவீனமடைந்த நிலையில் குளியலறையில் கிடப்பதைக் கண்டறிந்தனர்.
தம்பதியினர் இருவருமே தலா 150 கிலோவிற்கும் அதிக எடையைக் கொண்டிருந்ததால், கிராம மக்களின் உதவியுடன் 6 மீட்புப் பணியாளர்கள் இணைந்து இரு தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களைச் சிக் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மீட்புக்குழுத் தலைவர் மகாதிர் அப்துல் ஹமிட், காளான்களைச் சமைப்பதற்கு முன்பாக அவர்கள் குடும்பத்தினரிடம் கேட்டுப் பார்த்ததாகவும், ஆனால் அவர்கள் தவறுதலாக அது உண்ணக்கூடிய காளான் எனத் தெரிவித்ததே இந்த விபரீதத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறி, பொதுமக்கள் முறையான வழிகாட்டுதலின்றி காட்டுக்காளான்களைச் சாப்பிட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.




















