கோலாலம்பூர், மார்ச்- 11
உயர்க் கல்வி அமைச்சின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட டத்தோ டாக்டர் அனிசி இப்ராகிம் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தமது பணியைத் தொடங்கினார்.
மார்ச் 3ம் தேதி கட்டாயப் பதவி ஓய்வுப் பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி உஜாங்கிற்குப் பதிலாக அவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். உயர் கல்வி அமைச்சில் நேற்று அதிகாரப்பூர்வமாக முதல் நாள் பணியைத் தொடங்கிய அவருக்கு உயர்க் கல்வி அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (நிர்வாக மேம்பாடு) டத்தோ முகமட் அஸான் முகமட் அமிர், உயர்க் கல்வி அமைச்சின் உயர் நிர்வாக பொறுப்பதிகாரிகள் பலரும் அமைச்சின் பிராதான நுழைவாயிலில் திரளாக ஒன்று கூடி வரவேற்பு நல்கினர்.
அதிகாரப்பூர்வமாகப் பபணியைத் தொடங்கியதற்கான அறிகுறியாக அமைச்சின் வருகை பதிவு இயந்திரத்திலும் அவர் தமது வருகையைப் பதிவு செய்தார். தொடர்ந்து உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டி ராஜா டாக்டர் ஸம்ரி அப்துல் காதரை அவர் சந்தித்துப் பேசினார்.
இங்கிலாந்து டுர்ஹாம் பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வி பயின்ற அவர் இலக்கியத் துறையில் மருத்துவப் பட்டம் பெற்றார். மாரா தொழில்நுட்ப கல்வி கழகத்தின் முன்னாள் மாணவரான அவர் அங்கு பட்டயப் படிப்பு, இளநிலை பட்டப்படிப்பு உயர்நிலை பட்டப் படிப்பு ஆகியவற்றை முடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
1994ம் ஆண்டில் அரசு துறை நிர்வாக அதிகாரியாக அவர் தமது அரசாங்கப் பணியைத் தொடங்கினார். பொதுச் சேவைத் துறையில் துணைத் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்த அவர் பல்வேறு அரசு துறைகளில் சேவைப் புரிந்தவராவார். பிரான்ஸ் பாரிசிலுள்ள யுனேஸ்கோ அமைப்பில் மலேசியாவுக்கான நிரந்தரப் பேராளராகவும் அவர் நியமனப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
பொது நிர்வாகமுறையிலும் உயர்க்கல்வித் துறையிலும் பரந்த அனுபவம் பெற்ற அவர் மடானி அரசாங்கத்தின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உறுதுணையாகச் செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பு வலுப்பட்டிருக்கிறது. தரமான ஒருங்கிணைந்த உலகத் தரம் வாய்ந்த போட்டியாற்றல் மிக்க உயர்க்கல்வி முறையை ஏற்படுத்தும் மடானி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அனிசி இயங்குவார் என்ற நம்பிக்கை வலுப்பட்டிருக்கிறது என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை வாயிலாக குறிப்பிட்டிருக்கிறது.









