நோன்புக் கொண்டாட்டத்தை சிறப்பாக்க 460,000 ரிங்கிட் பெறுமான உதவித் தொகையை எம்பிஎஸ்பி குழுமம் வழங்குகிறது .

கோலாலம்பூர்,

நோன்புக் கொண்டாட்டங்களை மேலும் களிப்புடையதாக்கும் வகையில், தேவைப்படுவோருக்கு உரிய உதவிகளை நல்கவும் மலேசியர்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் 460,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை உட்படுத்திய பல்வேறு உதவித் திட்டங்களை நல்கியுள்ளது எம்பிஎஸ்பி குழுமம்.

 

அதில் 52,000 ரிங்கிட் தொகை ஷா ஆலம், ஈப்போ, குவாந்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 190 வசதி குறைந்த சிறார்கள் நோன்புப் பெருநாள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும் நோன்புப் பெருநாள் அன்பளிப்புத் தொகைக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமூகக் கடப்பாட்டை மையமாகக் கொண்ட இந்த நடவடிக்கைகளில் எம்பிஎஸ்பி நிறுவனத்தின் ஆதரவைத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்தும் வகையில் எம்பிஎஸ்பி குழுமத் தலைவர் டத்தோ வான் கமாருஸமான் வான் அமாட் நேரடியாகவே களமிறங்கி உதவிகளை நல்கினார்.

மேலும் சமூக நலத்திட்டங்களுக்கு உதவிடும் வலுவான நிலைப்பாட்டின் அடிப்படையில் 16 சமூக நல இல்லங்களுக்கு 100,000 ரிங்கிட் உதவிநிதியும் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர் இல்லம், சமூக நல இல்லம், சமயப் பள்ளிக்கூடங்கள் என்ற பலதரப்பட்ட அமைப்புகளுக்கு தலா 10,000 ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தலைநகர் சௌகிட் பகுதில் உள்ள ஆதரவற்ற சிறார் பராமரிப்பகங்கள் இரண்டில் நடத்தப்பட்ட நோன்பு துறப்பு உபசரிப்புக்கான முழு செலவுத் தொகையான 252,000 ரிங்கிட்டையும் எம்பிஎஸ்பி நிறுவனம் முழுமையாக ஏற்றுக் கொண்டது.

குழுமத்திலுள்ள முஸ்லிம் அல்லாத பணியாளர்களையும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைத்ததன்வழி, ரமலான் மாதத்தில் ஒற்றுமையுணர்வையும் வலிமைப்படுத்தி இருக்கிறது இந்தக் குழுமம்.

சமூக நலனில் கடப்பாடு கொண்ட எம்பிஎஸ்பி நிறுவனம், ஈகை உணர்வை முதன்மையாகக் கொண்டு மக்களுக்கான தர்மப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும். ரமலான் மாதத்தில் மட்டுமல்லாது ஆண்டு முழுவதுமே இவ்வாறான நற்பணிகளை எம்பிஎஸ்பி மேற்கொள்ளும் என்று அறிக்கைவழி அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here