ஈப்போ:
லெங்காங் அருகே உள்ள சம்பிதான், கம்போங் இபோலில் உள்ள ஒரு ரிசார்ட் கட்டுமான தளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தபோது, நச்சுப் புகையை சுவாசித்ததாக நம்பப்படும் ஒரு இந்தோனேசியர் உட்பட மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், ஏனைய நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை 10.08 மணிக்கு தீயணைப்பு துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், லெங்காங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.
29 மற்றும் 37 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மற்றைய இந்தோனேசிய தொழிலாளி கெரிக் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி இறந்ததாகவும் அவர் கூறினார்.
“மொத்தமாக ஏழு தொழிலாளர்கள் சாக்கடையில் சிக்கிக் கொண்டனர். இருப்பினும் தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஐந்து தொழிலாளர்கள் ஏற்கனவே பொதுமக்களால் வெளியேற்றப்பட்டு, அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தனர், மேலும் இருவர் குழிக்குள் சிக்கிக் கொண்டிருந்தனர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மீதமுள்ள இரண்டு பாதிக்கப்பட்டவர்கள் தீயணைப்பு வீரர்களால் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் சபரோட்ஸி கூறினார்.





















