கடந்த வாரம் ஜோகூரில் உள்ள இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலையில் நடந்த விபத்தில் தொடர்புடைய மசெராட்டியின் சிங்கப்பூர் ஓட்டுநர், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமானதாக ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டபோது தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணைக் கோரினார்.
சிங்கப்பூரில் அரசு ஊழியரான 27 வயதான இர்ஷாத் அப்துல் ஹமீத், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி நூர் ஃபாத்தின் ஃபரித் முன் வாசிக்கப்பட்ட பின்னர், இந்த மனுவை தாக்கல் செய்ததாக பெரித்தா ஹரியான் தெரிவித்தார். மே 9, மாலை 6.40 மணிக்கு விரைவுச்சாலையின் 0.6 கி.மீ. தொலைவில் தனது வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று 32 வயதான ஏ. வசந்தராஜ் என்பவரின் மரணத்திற்கு காரணமானதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் கவனக்குறைவாகவோ அல்லது ஆபத்தான முறையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக இர்ஷாத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் பிரிவு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்க வகை செய்கிறது.
தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ அவர் தகுதியை இழக்க நேரிடும். சட்டவிரோதமாக யு-டர்ன் செய்யும்போது இர்ஷாத் அகற்றியதாகக் கூறப்படும் எஃகு சாலைத் தடுப்புச் சுவரில் மோதி வசந்தராஜ் இறந்தார்.
தலை, இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக இஸ்கண்டார் புத்ரி காவல்துறைத் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார். ஓட்டுநர் தடுப்புச் சுவரில் மோதி, எதிர்புற போக்குவரத்தின் வழியில் தனது காரை நிறுத்தியதாக குமரேசன் கூறினார்.
எதிர் திசையில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தடையைத் தவிர்க்க முடியாமல் சாலையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டதாக அவர் கூறினார். வழக்குத் தொடர துணை அரசு வழக்கறிஞர் அமிரா தஸ்னிம் சலே தலைமையில், இர்ஷாத் சார்பாக வழக்கறிஞர்கள் பஹாருதீன் பஹாரிம், ஜரினா இஸ்மாயில் டாம் ஆகியோர் ஆஜரானர்.
நீதிமன்றம் இரண்டு மலேசிய நபர்களின் உத்தரவாதங்களுடன் 12,000 ரிங்கிட் ஜாமீன் விதித்தது. மேலும் இர்ஷாத் மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராகவும் அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தவும் உத்தரவிட்டது. வழக்கை மீண்டும் பரிசீலித்து ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு நீதிமன்றம் ஜூன் 10ஆம் தேதியை நிர்ணயித்தது.








