கோத்தா பாரு:
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹாட் யாய் நகரில் சட்டவிரோத தெரு பந்தயத்தில் ஈடுபட்டதாக 10 மலேசியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிரீன்வே நைட் மார்க்கெட் அருகே குறித்த 10 மலேசியர்களும் அதிக சத்தம் எழுப்பி போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாக உள்ளூர்வாசிகளிடமிருந்து தாய்லாந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று, தாய்லாந்து சுற்றுலா காவல்துறை (ஏழாவது மண்டலம்) துணைத் தலைவர் லெப்டினன்ட் கர்னல் சகரின் அனுசமான் சாகுல் கூறினார்.
ஹாட் யாய் தெருக்களில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட பல கார்கள் பந்தயத்தில் ஈடுபட்டதை உள்ளூர்வாசிகளும் கண்டதாக தெரிவித்தார்.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, சுற்றுலா மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் உதவியுடன் கோ ஹாங் போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் குறித்த மலேசியர்களை அடையாளம் காண முடிந்தது என்று சொன்னார்.
“நேற்று (தாய் நேரப்படி) காலை 11 மணியளவில், அந்தக் குழு கண்காணிக்கப்பட்டு, ஆறு வாகனங்களும், அவற்றில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதில் “21 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 பேருக்கு தாய்லாந்து போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
குறித்த மலேசியர்கள் மே 16 அன்று வார இறுதிப் பயணத்திற்காக மலேசிய பதிவு செய்யப்பட்ட 6 செடான் கார்களில் ஹாட் யாய் நகருக்குள் நுழைந்ததாக அறியப்படுகிறது.
“குற்றம்சாட்டப்பட்ட மலேசியர்கள் தங்கள் நடத்தைக்கும், தங்களால் ஏற்பட்ட தொல்லைக்கும் மன்னிப்பு கோரினர், மேலும் அந்தக் குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, அக்குழு உடனடியாக மலேசியா திரும்ப உத்தரவிடப்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட வெளிநாட்டு ஓட்டுநர்கள் தாய்லாந்தில் வாகனம் ஓட்டும்போது நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் நினைவூட்டினார். மேலும் தாய்லாந்து சுற்றுலா நடத்துநர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தாய் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பயணிகளுக்கு முழுமையாக விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




















