நடுவானில் பறக்கும்போது பயிற்சியாளர் மாரடைப்பால் பலி; விமானி அதிர்ச்சி

இங்கிலாந்து நாட்டின் வடக்கே லங்காஷைர் பகுதியில் 57 வயது மூத்த விமான பயிற்சியாளர் ஒருவரை அழைத்து கொண்டு பிளாக்பூல் விமான நிலைய பகுதியில் ஒரு ரவுண்டு வருவதற்காக விமானி ஒருவர் சென்று உள்ளார்.

ஒற்றை என்ஜின் கொண்ட பைப்பர் என்ற பி.ஏ.-28-161 எண் கொண்ட விமானம் ஓடுபாதையில் செல்லும்போது அவர்கள் இருவரும் நன்றாக பேசி கொண்டு இருந்து உள்ளனர். விமானம் உயரே சென்றபோது, பயிற்சியாளரின் தலை திடீரென சரிந்து உள்ளது.

ஆனால், அவர் தூங்குவது போன்று நடிக்கிறார் என விமானி நினைத்து உள்ளார். மூத்த பயிற்சியாளர் நலமுடன் இருக்கிறார் என விமானிக்கு தெரியும். அதனால் தவறாகவோ அல்லது தீவிர விவகாரமோ எதுவும் நடக்கவில்லை என்று நினைத்தபடி விமானத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து உள்ளார். ஆனால் கடைசியாக பயிற்சியாளரின் தலை, விமானியின் தோளில் சாய்ந்து உள்ளது.

அப்போதும், நகைச்சுவைக்காக அவர் அப்படி செய்கிறார் என நினைத்தபடி, தொடர்ந்து பறந்து கொண்டு இருந்து உள்ளார். விமானம் தரையிறங்கிய பின்னரும் பயிற்சியாளர் பதில் எதுவும் அளிக்காமல், எழுந்திருக்காத நிலையில், அதிர்ச்சியடைந்த விமானி அவசரகால விமான பணியாளர் ஒருவரை உதவிக்கு அழைத்து உள்ளார்.

ஆனால், அந்த பயிற்சியாளரை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் இருந்து உள்ளது என்றும், அதற்காக மருந்து எடுத்து வந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவரது பிரேத பரிசோதனை முடிவில், மாரடைப்பினால் அவர் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதுபற்றிய விவரங்கள், இங்கிலாந்து நாட்டின் விமான விபத்துகள் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணை முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here