மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: கோடிகள் செலவு, ஜீரோ ரிசல்ட்- முன்னாள் துணை முதல்வர் விமர்சனம்

கர்நாடக மாநிலம் முழுவதும் பருவ மழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை கொட்டிய கனமழை காரணமாக நகரமே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் ரெயில்வே பாலங்கள், முக்கிய சந்திப்புகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. இந்த மழையின் காரணமாக வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நின்றது.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சினத்து வருகின்றன. கட்டமைப்புகளுக்கான கோடிக்கணக்கில் செலவு செய்தபோதிலும், அதன் ரிசல்ட் ஜீரோவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், மல்லேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அஷ்வத் நாராயண் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நேற்றிரவு பெய்த மழை பெங்களூருவின் கட்டமைப்பு மட்டும் வெளிப்படுத்தவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஏதும் செய்யவில்லை என்பதை வெளிக்காட்டியுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜீரோ ரிசல்ட்தான்” என விமர்சித்துள்ளார்.

மழை வெள்ளத்தில் பெங்களூரு தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில் “அதிகாரிளுடன் தொடர்ந்து நான் தொடர்பில் இருந்து கொண்டு இருக்கிறேன். நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் போல, சவால்களை எதிர்கொள்வதற்கும் நிவாரணத்தை உறுதி செய்வதற்கும் 24 மணி நேரமும் உழைத்து வருகிறேன்.

இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புதியவை அல்ல. அவை பல ஆண்டுகளாக அரசாங்கங்கள் மற்றும் நிர்வாகங்களால் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இப்போது உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் – அவற்றைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். தற்காலிகத் தீர்வுகளுடன் அல்ல, நீண்டகால, நிலையான தீர்வுகளுடன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here