கோத்தா பாரு:
கடந்த சனிக்கிழமை பச்சோக்கின் பெரிஸ் குபூர் பெசாரில் உள்ள ஒரு ஸ்பா உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேக நபர், இன்று முதல் மே 29 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ், குறித்த 45 வயது நபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையின் கோரிக்கையை மாஜிஸ்திரேட் ரைஸ் இம்ரான் ஹமீத் அங்கீகரித்தார்.
நேற்று, இந்த வழக்குடன் தொடர்புடைய 38 வயது பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 ஆவது சந்தேக நபரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் தோள்பட்டை, முதுகு, கைகள் மற்றும் கால்களில் பலத்த எரி காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், குபாங் கெரியானில் உள்ள யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா மருத்துவமனையில் (HUSM) சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.




















