புத்ரா ஜெயா,
2025 / 2026 தவணைக்கான மலேசிய கல்வியமைச்சின் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் தங்களுக்கு இடம் கிடைத்திருக்கிறதா என்பதை அதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்கள் ஆன்லைன் வழி தெரிந்து கொள்ளலாம். 2025 மே 21ஆம் தேதி காலை 10.00 மணி தொடங்கி மாணவர்கள் தங்களது விண்ணப்பம் மீதான முடிவை சரி பார்த்துக் கொள்ளலாம்.
2024 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்ற பின்னர் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் https://matrikulasi.moe.gov.my என்ற வலைத் தளத்தில் தங்களது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேசமயம், ஆன் லைன் வழி விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவர்கள் 2025 மே 22 முதல், ஜூன் 21ஆம் தேதி வரை தாங்கள் விண்ணப்பங் களை விரும்பும் கல்லூரிகளின் வலைத் தளங்களில் பதிவு செய்யலாம்.
வாய்ப்புக் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் 2025 ஜூன் 22ஆம் தேதி சம்பந்தப்பட்ட மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் மாணவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று கல்வியமைச்சின் ஓர் அறிக்கை நேற்று தெரிவித்தது.
வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் https://matrikulasi.moe.gov.my என்ற வலைத் தளத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
2025 மே 21 முதல் ஜூன் 21 வரை அவர்கள் இந்த மேல் முறையீட்டை சமர்ப்பிக்கலாம். இதன் மீதான முடிவு 2025 ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்வியமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










