அம்னோவுக்கு மீண்டும் திரும்புகிறார் கைரி?

கோலாலம்பூர்,

அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மீண்டும் தாய்க் கட்சிக்கே திரும்புகிறார் என்பதை நம்பத் தகுந்த வட்டாரம் ஒன்று உறுதிப்படுத்தியிருக்கிறது.

கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி, கட்சி தேசிய இளைஞர் அணி முன்னாள் தலைவர் கைரி ஆகிய இருவரும் மிக அண்மையில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

இச்சந்திப்பின் போது வரும் சபா மாநில சட்டமன்ற தேர்தல், 16 ஆவது பொதுத் தேர்தல் குறித்து இவ்விருவரும் பேசினர் என்று நம்பப்படுகிறது.

மேலும் தாய்க் கட்சிக்கு திரும்பும்படி கைரியை ஸாஹிட் ஹமிடி கேட்டுக்கொள்ள கைரியும் அந்த அழைப்பை ஏற்றுகொண்டார் என்று நம்பப்படுகிறது.

இரண்டு தேர்தல்களிலும் அம்னோவின் அறுதி பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்யும் அம்னோவின் வியூகங்களுக்கு வலுசேர்ப்பதற்கு கைரியை மீண்டும் கட்சிக்குள் திரும்ப கொண்டுவருவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரம் தெரிவித்தது.

கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ வேட்பாளராக பாரிசான் நேஷனல் டிக்கெட்டில் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் கைரி களமிறங்கினார். ஆனால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் பிகேஆர் களமிறக்கிய புதுமுகம் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் தோல்வி கண்டு அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் கட்சி கட்டொழுங்கை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அம்னோ உச்சமன்றம் அவரை கட்சியில் இருந்து நீக்கியது.

2023, நவம்பர் 28 ஆம் தேதி இரவு மெனாரா டத்தோ ஓனில் உள்ள அம்னோ தலையகத்தில் ஸாஹிட் ஹமிடி தலைமையில் கூடிய அம்னோ உச்சமன்றம் முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரியை கட்சியில் இருந்து நீக்கியது.

ஆனால் அண்மைய அரசியல் நகர்வில் கைரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்குரிய முயற்சிகளை ஸாஹிட் ஹமிடி முன்னெடுத்திருக்கிறார். கைரியும் தாய்க் கட்சிக்கு திரும்புவதற்கு ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் இதன் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அந்த வட்டாரம் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here