கோலா சிலாங்கூரில் லோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஐந்தாம் படிவ மாணவர் மரணம்

கோலாலம்பூர்:

கோலா சிலாங்கூர் ஜெராமில் உள்ள ஜாலான் பாரிட் மஹாங்கில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் லோரியுடன் மோதியதில், ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மதியம் 2.15 மணிக்கு விபத்து நடந்த இடத்திலேயே 17 வயது ஆண் மாணவர் உயிரிழந்தார் என்று, கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் அசாஹருதீன் தாஜுடின் கூறினார்.

26 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற காலி லோரி, பிரதான சாலையிலிருந்து ஜாலான் பாரிட் மஹாங்கிற்குத் திரும்பியது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. அப்போது “பாதிக்கப்பட்டவர் ஜாலான் பாரிட் மஹாங்கிலிருந்து இஜோக்கிற்குச் செல்லும் வழியில் பிரதான சாலைக்குச் சென்று கொண்டிருந்தார்.”

“விபத்து நடந்த இடத்தை அடைந்ததும், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பாதையில் திரும்பி அதன் முன்பக்கத்தில் மோதியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

மோதலின் விளைவாக, அந்த இளைஞன் சாலையில் தூக்கி வீசப்பட்டு பல காயங்களுக்கு உள்ளானான். அங்கு வந்த சுகாதாரத்துறை பணியாளர்களால் சம்பவ இடத்திலேயே அவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

விபத்து நடப்பதற்ற்கு முன்னதாக, அந்த மாணவர் முன்பு தனது பள்ளியில் நடந்த கூடுதல் வகுப்புகளில் கலந்து கொண்டதாகவும், தனது பள்ளி உபகரணங்களை வைப்பதற்கு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாகவும் அசாஹருதீன் கூறினார்.

பிரேத பரிசோதனைக்காக உடல் தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் குறித்த லோரி ஓட்டுநர் காயமடையவில்லை.

இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அசாஹருதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here