ஈப்போ :
மின்னியல் சிக்ரெட்டை கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேராக் மாநில அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.
மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த விஷயம் எழுப்பப்பட்டிருந்தாலும், இன்னும் ஆழமான மறுஆய்வு தேவை என்றும், இது தொடர்பில் விவாதங்கள் நிலுவையில் உள்ளன என்றும் பேராக் மந்திரி பெசாரான அவர் கூறினார்.
“எந்தவொரு உறுதியான முடிவையும் எடுப்பதற்கு முன் ஒரு ஆய்வு நடத்தப்பட வேண்டும். இது குறித்து நான் மாநில சுகாதாரக் குழுத் தலைவர் ஏ. சிவனேசனிடம் பேசினேன், ஆனால் இந்த அமலாக்கத்தில் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன” என்று, இன்று புதன்கிழமை (ஜூன் 4) இங்குள்ள ஒரு ஹோட்டலில் நடந்த நிகழ்வின்பின் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மே 23 அன்று, வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் திட்டத்தை பேராக் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும், அடுத்த வாரம் இந்த விஷயத்தை மாநில சட்டமன்ற கூட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் சாரணி கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க (வேப்) ஆபரேட்டர்கள் சங்கத்திடமிருந்தும் ஒரு கோரிக்கை வந்ததாக சாரணி செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறினார்.
“எனவே வேப் விற்பனையை ஒழுங்குபடுத்துவது அல்லது தடை செய்வது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு சுகாதார தாக்கங்கள் மற்றும் வர்த்தகர்கள் மீதான பொருளாதார விளைவுகள் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
சுகாதாரம் மற்றும் வணிக தாக்கக் கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்யும் பணி சிவநேசன் வசம் உள்ளது என்றும், அனைத்து பரிசீலனைகளும் முழுமையாக ஆராயப்பட்டவுடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சாரணி கூறினார்.













