ஏர் இந்தியாவின் 37% விமானங்கள் 10 ஆண்டுகளை கடந்தவை; வெளியானது புள்ளி விவரம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் 37 சதவீத விமானங்கள் 10 ஆண்டுகளை கடந்தவை என்பது பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானம் 30 வினாடிகளில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் பயணிகள், சிப்பந்திகள், விமானிகள் என 241 பேர் பலியாகினர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 265 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் சோகம் மற்றும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஒருசேர நிகழ்த்தி உள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 37 சதவீத விமானங்களின் வயது 10 ஆண்டுகளை கடந்தவை என்பது பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு;

ஆமதாபாத் விமான விபத்துக்கு முன்னர் ஏர் இந்தியா மொத்தம் 188 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமானங்களில் 43 விமானங்கள், 15 ஆண்டுகளை கடந்தவை. 27 விமானங்கள் 10 முதல் 15 ஆண்டுகளாக இயங்கி வருபவை.

59 ஏர் இந்தியா விமானங்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளாக வானில் பறப்பவை. 69 விமானங்கள் 5 ஆண்டுகளுக்குக்கும் குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆமதாபாதில் விபத்தை சந்தித்த ஏர் இந்தியா விமானத்தின் வயது 11 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் பார்லிமெண்டில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். அதில் இடம்பெற்றுள்ள கூடுதல் விவரங்கள் வருமாறு;
இந்தியாவில் ஒரு விமானம் பறப்பதற்கான ஆயுட்காலம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் எந்த வழி காட்டுதல்களையும் வகுக்கவில்லை. விமானங்களின் உற்பத்தியாளரால் நிர்ணயிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, அட்டவணையின்படி பராமரிப்புடன் இருந்தால் விமானம் பறக்க தகுதியானதாக கருதப்படும்.

இந்தியாவை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட விமானம், அது எந்த வகையானது என்ற சான்றிதழ் செல்லுபடியாகும் வரை அல்லது தொடர்ந்து இயக்கலாம் என்று அதன் உற்பத்தியாளர் அல்லது அதை பராமரிப்பவர் சான்றளிக்கும் வரை இயக்கப்படலாம்.

விமானத்தின் பழுதான உதிரி பாகங்கள் கிடைக்காதது, கோளாறை சரி செய்யும் ஆகும் செலவு மிக அதிகமானது போன்ற காரணங்களினால் விமான இயக்கத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here