குளுவாங்,
குளுவாங் மாவட்டத்தில், ஒரு ஹினோ வகை லோரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றில் மோதியது. இந்த சம்பவத்தில், லோரி ஓட்டுனர் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார். சம்பவம் நேற்று காலை 8.20 மணியளவில், மெர்சிங்கிலிருந்து பத்து பகாட் செல்லும் வழியில் அமைந்துள்ள காம்போங் ஸ்ரீ லுக்கட் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சம்பந்தப்பட்ட லோரி, Nan Sun Timber & Hardware SDN BHD நிறுவனத்தின் சொந்தமானதாகும். ஒட்டுனர் முஜஃபார் அதீப் பின் முகமட் அரிஃபின் (வயது 37), குளுவாங் பகுதியில் வசிப்பவர்.
விபத்துக்கான காரணமாக, எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென வலப்புறம் மாறியதை தவிர்க்க முயன்ற லோரி ஓட்டுனர், வலப்புறமாக திரும்பியபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டு மீது மோதி நின்றது. இதில் லோரி முன் பகுதி, கண்ணாடி, பம்பர், மற்றும் வீட்டின் கூரையில் சேதம் ஏற்பட்டது.
மோதிய வீடு, கம்பத்து ஒற்றை மாடி பங்களா வீடாகும். வீட்டு கூரை, சமையலறையின் சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் முகமட் ஃபாஸ்லி பின் ஹம்சன் என்பவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதல்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் பாஹ்ரின் முகமட் நோ தமதறிக்கையில் தெரிவித்தார்.









