இந்தோனேசியாவில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மலேசியர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது!

கோலாலம்பூர்:

ந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சோதனையில், மலேசியர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மொத்தம் 321 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் வியட்நாம் (228 பேர்) மற்றும் சீனா (57 பேர்) நாட்டைச் சேர்ந்தவர்கள், எஞ்சியவர்கள் மலேசியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து மற்றும் கம்போடியாவைச் சேர்ந்தவர்களாவர்.

ஜகார்த்தாவின் சைனாடவுன் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் இந்தச் சூதாட்ட மையம் செயல்பட்டு வந்தது. அங்கிருந்து சுமார் 75 ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளதாக இந்தோனேசிய தேசிய காவல்துறையின் குற்றப்பிரிவு இயக்குநர் வீரா சத்யா திரிபுத்ரா கூறினார்.

இந்தச் சூதாட்ட கும்பல் மிகவும் கட்டமைக்கப்பட்ட முறையில் இயங்கியதாகத் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் வாடிக்கையாளர் சேவை, டெலிமார்க்கெட்டிங் மற்றும் நிதி நிர்வாகம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் இந்தோனேசியாவிற்கு வெளியே உள்ளவர்களைக் குறிவைத்துச் செயல்பட்டனர்.

இந்த கும்பல் கடந்த இரண்டு மாதங்களாக இயங்கி வந்ததாகத் தெரிகிறது. சந்தேக நபர்களில் பலர் குறுகிய கால சுற்றுலா விசா மூலம் இந்தோனேசியாவிற்குள் நுழைந்து, விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

சோதனையின் போது பெருமளவிலான பணம் (பல்வேறு நாடுகளின் கரன்சிகள்), கணினிகள், கைபேசிகள், கடவுச்சீட்டுகள் (Passports) மற்றும் சூதாட்டத் தளங்களை நிர்வகிக்கப் பயன்படுத்தப்பட்ட பிற உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 275 பேர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் குற்றவியல் மற்றும் குடிவரவுச் சட்டங்களின் கீழ், இவர்களுக்கு 9 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2 பில்லியன் ரூபியா (சுமார் $116,000) அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தோனேசியாவின் இன்டர்போல் (Interpol) பிரிவின் செயலாளர் உந்துங் வித்யாத்மோகோ கூறுகையில், மியான்மர் மற்றும் கம்போடியாவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே இயங்கி வந்த சூதாட்ட கும்பல்கள் இப்போது இந்தோனேசியாவிற்குத் தங்கள் செயல்பாடுகளை மாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் ஆன்லைன் சூதாட்டம் முற்றிலும் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here