மாணவர்கள் சமயம் கற்றவர்களாக திகழ வேண்டும் – நெகிரி செம்பிலான் இந்து சங்கத் தலைவர் வேண்டுகோள் .

News by K.Kalai

சிரம்பான், 

மாணவர்கள் சமயம், கலாசாரம் மற்றும் பாரம்பரிய கலைச்சாரத்தைப் பெற்றவர்களாக வளர வேண்டும் என நெகிரி செம்பிலான் இந்து சங்கத் தலைவர் சங்கபூஷன் சிவஸ்ரீ டாக்டர் எ.எல். ஆனந்தகோபி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது அவர்களின் வாழ்க்கையில் முழுமையான வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்று அவர் கூறினார்.

சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற செனவாங் வட்டார பேரவையின் திருமுறை ஒதும் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மாணவர்களுக்கு சமயக் கல்வி கிடைப்பதை பெற்றோர்கள் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்து சங்கத்தின் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் பல வட்டாரங்களில் இலவச சமய வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதையும், அந்த வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னலமின்றி சேவை செய்து வருகின்றனரையும் அவர் பாராட்டினார்.

ஆயினும், இந்த வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்பது மிகவும் குறைவாக இருப்பது கவலையளிக்கிறது எனக் கூறிய அவர், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெற்றோர்கள் சிறிது சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். பல ஆலயத் தலைவர்கள் மாணவர்களின் போக்குவரத்துக்கும் உணவிற்கும் ஆதரவளித்து வருவதாகவும், ஆனால் சில இடங்களில் மட்டும் பங்கேற்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் இந்து சங்கம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பல ஆலயங்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். மாநிலத்திலுள்ள முக்கிய அரசியல் தலைவர்களுடனும் நல்லுறவுகளை நிலைநிறுத்தி, சமூக நலனுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில இந்து சங்கத் தலைவர் உட்பட, செயலாளர் விவேகரத்னா உமாசுதன் பெருமாள், வட்டாரத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here