சபாவை உலுக்கிய கனிமச் சுரங்க லைசென்ஸ் ஊழல் 2 சபா சட்டமன்ற உறுப்பினர்கள் மீது விரைவில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்,

சபா மாநிலத்தைக் கடந்த ஆண்டு முதல் உலுக்கி வரும் கனிமச் சுரங்க லைசென்ஸ் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று நம்பப்படும் இரு சபா சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஒருவர் மீது நீதிமன்றத்தில் விரைவில் குற்றம்சாட்டப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று தெரிவித்தது.

இந்த 3 சந்தேகப் பேர்வழிகளையும் கைது செய்வதற்கான நடைமுறைகளை எம்ஏசிசி முன்னெடுத்திருப்பதை அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார். இந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளில் இருவர் சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றொருவர் பொதுமக்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட அவர், இவர்கள் மூவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார். மேலும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும் நாளும் அவர்களுக்குச் சொல்லப்படும் என்றார் அவர்.இப்போதைக்கு தேதியை என்னால் சொல்ல முடியாது. நடைமுறைகள் அனைத்தும் முழுமை பெற வேண்டும். இருப்பினும் இந்த மாதத்தில் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.

அதேசமயம் இந்த மூவரிடம் இருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று அஸாம் பாக்கி தெரிவித்தார். சிண்டுமின் சட்டமன்ற உறுப்பினர் யூசோப் யாக்கோப், கோத்தா கினாபாலுவில் உள்ள சபா எம்ஏசிசி தலைமையகத்தில் நேற்று காலை காணப்பட்டார். அங்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. காலை 8.45 மணியளவில் அவர் எம்ஏசிசி அலுவலகம் வந்தடைந்தார். மற்றொரு சட்டமன்ற உறுப்பினரும் தனிநபரும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் பெயர்களை எம்ஏசிசி வெளியிடவில்லை.

இந்த ஊழல் தொடர்பான ஒரு காணொலி வெளியிடப்பட்டு சபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சபா முதலமைச்சர் ஹஜிஜி நூர், சில சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பது தெரிகிறது. இவ்விவகாரம் தொடர்பில் எம்ஏசிசி அதன் புலன்விசாரணையை நிறைவு செய்து அதன் அறிக்கையை அட்டர்னிஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்பதை அஸாம் பாக்கி கடந்த ஜூன் 6ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.

இந்த ஊழல் விவகாரம் சபா மாநில அரசியலில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கெதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர். ஆனால் அந்த காணொலியில் இவர்கள் பேரம் பேசுவதும் இடம்பெற்றிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here