ஷா ஆலம்,
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான குற்றச்செயல்களை ஒடுக்குவதற்காக அநேகமாக இந்த ஆண்டு ஏஐ தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று டிஜிட்டல்துறை துணை அமைச்சர் டத்தோ வில்சன் உகரக் கும்போங் தெரிவித்தார். தேசிய இணையப் பாதுகாப்பு ஏஜென்சி இந்த சட்ட மசோதாவை ஆய்வு செய்து வருகிறது என்று துணை அமைச்சர் கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கப் பதிவேட்டில் இடம்பெற்ற 2010ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தைப்போல் இந்த சட்ட மசோதாவுக்கும் ஆதரவு கிடைக்கும் என்று டிஜிட்டல் அமைச்சு நம்பிக்கைக் கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் சொன்னார்.
அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு அநேகமாக இந்த ஆண்டு ஏஐ சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார். செத்தியா அலாம் எலுமிடத்தில் 2025 காவாய் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபின் அவர் நிருபர்களிடம் பேசினார்.

ஏஐ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்துவது குறித்து கருத்துரைக்கும்படி கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் தேசியப் போலீஸ் படை முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் உள்ளிட்டவர்கள் பற்றி ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோ பதிவுகள் வைரலானது பற்றி அவர் கருத்துரைத்தார் .
இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நானும் எதிர்நோக்கி இருந்தேன். என்னிடம் உதவி கேட்பதற்கு எனது நண்பரின் பெயரையும் புகைப்படத்தையும் மோசடிக் கும்பல் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2020 தொடங்கி 2024ஆம் ஆண்டு வரையில் உலகம் முழுவதும் ஸ்கேமர் எனப்படும் மோசடி வாயிலாக 5 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தமக்குத் தெரிய வருவதாகவும் அவர் சொன்னார். ஏஐ போன்ற அதி நவீன தொழில்நுட்பத்தை சில பொறுப்பற்ற தரப்பினர் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தி மோசடி புரிகின்றனர் என்றும் அவர் சொன்னார். ஆகவே டிஜிட்டல் விழிப்புணர்வு பயணம் மூலமாக ஏஐ மோசடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றோம். புநநகர் மக்களும் பணி ஓய்வு பெற்றவர்களும் இந்த மோசடிக் கும்பல்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இந்த விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது என்று துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




















