விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்.. ஏர் இந்தியா விமானத்தில் தகராறு செய்த பெண் மருத்துவர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‘விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்’ என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.

நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில் இருந்து சூரத் செல்ல தயாராக இருந்தது.

அப்போது, ஆயுர்வேத பெண் மருத்துவரான வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர், தனது இரு கைப்பைகளில் ஒன்றை தனது இருக்கை 20F-ல் வைத்துள்ளார். ஆனால், மற்றொரு பையை விமான ஊழியர்கள் அமரும், பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார்.

இதைப் பார்த்த விமான ஊழியர்கள், அந்த பையை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், வியாஸ் ஹிரல் இதை ஏற்க மறுத்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், “எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்” என அச்சுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, விமானி மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, வியாஸ் ஹிரலை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இச்சம்பவத்தால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகச் சூரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here