சிப்பாங்:
இன்று காலை மாஜு எக்ஸ்பிரஸ்வேயின் (MEX) கி.மீ.21.8 இல் பயணித்தபோது, Proton Gen 2 கார் தீப்பிடித்ததில் ஒரு ஆடவரும் அவரது வருங்கால மனைவியும் மயிரிழையில் உயிர் பிழைத்தனர்.
பாதிக்கப்பட்ட 31 வயது ஓட்டுநர், சைபர்ஜெயாவை விட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் திடீரென நிகழ்ந்ததாகக் கூறினார்.
பிரேக்குகள் சரியாக வேலை செய்யவில்லை என்று தனது வருங்கால மனைவி தனக்கு எச்சரித்ததாகவும், அதேநேரத்தில் குறித்த சாலையில் பயணித்த ஏனைய வாகன ஓட்டிகள் வாகனத்தின் பின்புறத்திலிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிப்படுவதை சுட்டிக்காட்டியதாகவும் அவர் சொன்னார்.
“முதலில் எங்களுக்கு அது புரியவில்லை, ஆனால் எங்கள் பின்னால் இருந்தவர்கள் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தனர். அப்போதுதான் நாங்கள் தீயைக் கவனித்தோம்,” என்று அவர் கூறினார்.
தீயினால் அவர்களின் கார் 95 விழுக்காடு எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.


















